தேர்தல் களத்தில் கடைசி நேரத்தில் களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்கள்: நடனமாடியும், வேடமிட்டும் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் நடனமாடியும், வேடமிட்டும் தங்களுக்கு வாக்கு கேட்டு கடைசி நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பலர் வேட்புமனு தாக்கல் செய்ததோடு இருந்து விட்டனர். சிலர் தொடக்கத்தில் பிரச்சாரம் செய்யாமல் இருந்துவிட்டு பிரச்சாரம் முடிய சில தினங்களே உள்ள நிலையில் களம் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாகனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் பக்கவாட்டில் தங்கள் சின்னம், வாக்குறுதிகள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று அவர்களே தனி நபராக மைக்கில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அம்புரோஸ். இவர் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு பிரதான கட்சிகளுக்கு ஈடாக மக்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தினார். இந்தமுறை திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர் அம்புரோஸ் ஆடிக்கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இவருடன் ஆண், பெண் என ஐந்துக்கும் மேற்பட்டோர் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து செல்கின்றனர். இந்த வித்தியாசமான பிரச்சாரத்தை வாக்காளர்கள் நின்று கவனித்து செல்கின்றனர்.

பழனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ். இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் பொதுமக்களை கவரும் வகையில் ராஜா போன்று வேடமணிந்து வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் தோன்றி பெண்கள் மத்தியில் அறிமுகமான நடிகர் முனிஸ் ராஜ் தங்கள் பகுதிக்கு வாக்கு கேட்டு வருவதை பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து இவர் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ‘ஊழலை ஒழிக்க தான் பிறந்த ஊரான பழனியில் இருந்து தனது அரசி யல் பயணத்தை தொடங்குவதாக’ சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே