மாநகராட்சி பகுதியில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்: சோழிங்கநல்லூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் சோழிங்கநல்லூர், திருவான்மியூர், போரூர் சிக்னல், சாலிகிராமம், கோடம்பாக்கம் , நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 12 ஆயிரம் கி.மீ. சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்துள்ளேன். சோழிங்கநல்லூரில் நடைபெறுவது 57-வது பிரச்சார கூட்டம். இந்த தொகுதி வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, ஆளுங்கட்சியிடமிருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாத சூழலிலும் எத்தனையோ பணிகளை செய்துள்ளார். 6 குளங்களை தனது சொந்த செலவில் தூர்வாரியுள்ளார். நாம் விரைவில் ஆளுங்கட்சி ஆகப்போகிறோம். எனவே, தொகுதி மக்களுக்கு மேலும் பல பணிகளை அவர் செய்வார்.

சோழிங்கநல்லூர் பகுதி ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதி ஆகும். முதல்வராக இருந்தபோது கருணாநிதி தரமணியில் டைட்டல் பார்க் கொண்டுவந்தார். அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. தொழில் வளத்தை பெருக்க, தமிழகத்தின் உரிமைகளை மீட்க திமுகவை ஆதரிக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மாநகராட்சி பகுதியில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்றார்.

இன்று சென்னையில் பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், திருவிக நகர், கொளத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாலை 5.30 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே