தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை : பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சீனாவில் இருந்து வந்த 36 நபர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும்; 4 நபர்களுக்கான பரிசோதனை அறிக்கை வரவில்லை என தெரிவித்தார்.

கேரள மாநிலத்திற்கு அருகில் உள்ள 5 மாவட்டங்களில் பொதுமக்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், அனைத்து மருத்துவமனைகளிலும் இரண்டு நாட்களாக சோதனை செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். 

இதனிடையே, ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதேபோல சீனாவில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளதா என மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை கிண்டியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் பதிவாளர் மருத்துவர் ஸ்ரீனிவாசன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் தான் வைரஸ் நோய் தாக்குவதாக தெரிவித்தார்.

முறையாக கை கழுவினால் 80 சதவீத நோய்களை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்த அவர், தமிழகத்தில் கோடை காலம் நெருங்குவதால் கொரோனோ குறித்த அச்சம் மக்களுக்கு தேவையில்லை என விளக்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே