கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் காஞ்சிபுரம், சென்னை, சேலம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் என்ற இருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான UAPA சட்டப்பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் கொடுத்த தகவல்களின் பேரில் இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மெகபூப் பாஷா மற்றும் ஜெபியுல்லா, மன்சூர்கான், அஜ்மத்துல்லா ஆகிய மேலும் 4 பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொல்வதற்கு முன் முக்கிய குற்றவாளிகள் இருவர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் சுற்றித்திரிந்ததாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் வெளியான நிலையில் காமாட்சி அம்மன் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவில்களில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் தீவிரவாதிகள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் தேங்காய் பட்டிணம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நவாஸ் சாகுல் என்பவர் தவறான தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.
எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தவுபிக் மற்றும் சமீம் ஆகியோருக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரமுகர் நவாஸ் சாகுல் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நவாஸ் சாகுலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.