#WFH : உண்மையில் மகிழ்ச்சியா ???

வீட்டில் அலுவலக வேலை என்றதும் பாஸ் தொல்லை இல்லை, மீட்டிங் இல்லை, டிராஃபிக் பைக் டிரைவிங் இல்லை, நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டியதில்லை இப்படி பல காரணங்களை எண்ணி மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள்.

ஆனால் அது தற்போது அலுவலகத்தில் செய்வதைக் காட்டிலும் சிரமமாக உள்ளதா..?

கண்டறிய இதோ வழிகள்..!

அலுவலகம் என்றால் பலருக்கும் காலை 10 முதல் மாலை 6 என்ற கணக்கில்தான் இருக்கும். இப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினால் அலுவலக வேலை முடிந்தது.

அதன்பிறகு வீடு, குடும்பம் மட்டும்தான். ஆனால் தற்போது வீட்டிலேயே அலுவலக வேலை என்பதால் இரண்டிற்கும் வித்தியாசமின்றி வேலை செய்வீர்கள்.

அலுவலகத்திலும் வீட்டில் தானே இருக்கிறீர்கள் இதை முடித்துக்கொடுங்கள் என கேட்பார்கள். இப்படி நேரம் தெரியாமல் வேலை செய்தால் நிச்சயம் கடினம்தான்.

முதல் இரண்டு நாட்கள் உற்சாகமாக இருந்திருக்கும். தற்போது வீட்டிலும் அலுவலக வேலை என்பதால் எப்போதுமே ஒர்க் மோடிலேயே இருப்பீர்கள்.

இது ஒருவகையில் சளிப்பூட்டும். அதேசமயம் ஓவர் ஒர்க் சோர்வை உண்டாக்கும்.

அலுவலகம், வீடு என மக்கள், நண்பர்களைக் காணாமல் நான்கு சுவருக்குள் நீங்களும் லேப்டாப்பும் என வேலை செய்வது தனிமையை உணர வைக்கும்.

அலுவலகத்தில் பேசவும், பகிர்ந்துகொள்ளவும், சுற்றிலும் கூச்சல் சத்தம் உடன் பணிபுரிவோர் இருப்பார்கள்.

தற்போது அந்த நிலை இல்லை என்பது தனிமையை உணர்த்தும்.

அலுவலகத்தில் அருகில் இருந்தால் மற்றவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் , எப்படி செய்கிறார்கள் என்பது தெரியும்.

ஆனால் யாரும் காணாததால் உங்களை விட மற்றவர்கள் சிறப்பாக செய்கிறார்களோ என்ற எண்ணம் வரும். நீங்களும் சிறப்பாக செய்ய வேண்டும் , கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்கிற பதட்டம் உண்டாகும்.

இதுவே மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

வீட்டில் அலுவலகப் பணி என்பதால் உங்களை தொடர்பில் வைத்துக்கொள்ள எப்போதும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் , அலைபேசி, வீடியோ மீட்டிங் என அடிக்கடி உங்களை தொடர்பு கொண்டே இருப்பார்கள்.

நீங்களும் அலுவலகத்திலிருந்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா என அடிக்கடி வாட்ஸ்அப் பார்ப்பது, மின்னஞ்சல் பார்ப்பது என அதுவே பெரும் மன உளைச்சலை உண்டாக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே