கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் இல்லை என ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் 2 டோஸ்களும் போட்டு விட்டதாகவும், 62 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் குறித்தும் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. நேற்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம், பூஸ்டர் டோஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஒரு விஷயத்தை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் போடுவது தொடர்பாக மத்திய அரசின் அறிவியல் விவாதங்களிலோ அல்லது பொது சுகாதார வெளியிலோ தற்போதைக்கு திட்டம் எதுவும் இல்லை எனவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் மட்டுமே கவனம் செலுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.