நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்: குஜராத் போலீசார் தகவல்

குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர்.

அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

  • நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும்,
  • தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும்,
  • இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே