சென்னையில் சொத்துக்காக துப்பாக்கி முனையில் மாமியாரை கடத்திய மருமகள் கைது

சென்னை அயனாவரத்தில் சொத்துக்காக மாமியாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி மருமகளே கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியருக்கு செந்தில், ராஜ்குமார் என 2 மகன்கள் உள்ளனர்.

சொத்து தகராறில் கடந்த 2014ம் ஆண்டு தமது சகோதரர் ராஜ்குமாரை, செந்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செந்திலின் மனைவி மேனகா தமது தோழியின் வீட்டில் தங்கினார்.

இந்நிலையில் 2018ம் ஆண்டு தோழியின் கணவரான ராஜேஷ் கண்ணா, மேனகாவின் மாமனார் சுப்புராயனை கொலை செய்தார். 

அப்போதிருந்தே மாமியார் பத்மினியிடம் மேனகா சொத்துக்களை கேட்டு மிரட்டி வந்தார்.

இதனால் அச்சம் அடைந்த பத்மினி கடந்த 18ம் தேதி அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அவரை பின்தொடர்ந்த மேனகா, கூட்டாளிகளுடன் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அயனாவரத்தில் பதுங்கியிருந்த மேனகாவை கைது செய்தனர்.

இதற்கிடையே போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல், மூதாட்டி பத்மினியை விடுவித்து விட்டு தப்பினர்.

இதையடுத்து பத்மினியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், பத்மினியை கடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

தலைமறைவான ராஜேஷ் கண்ணா பிடிபட்ட பிறகே, மூதாட்டி பத்மினி கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

குடும்பச் சொத்துக்களை அபகரிக்கவும், தவறான உடல் சார்ந்த தேடலுக்காகவும் மேனகா தற்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே