இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பாரா தோனி?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால் தோனி கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

மஹிந்திரா சிங் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மைல்கல். பேட்டுடன் களத்துக்குள் அவர் நுழையும் போது எழும் ஆரவாரம் அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை பிரதிபலிக்கும்.

கங்குலி, டிராவிட்டுக்கு பிறகு சிறந்த கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி பல வெற்றிகளுக்கு வித்திட்டவர் தோனி என்றால் அதனை மறுத்து விட முடியாது.

பரபரப்பான கட்டத்திலும் சரியாக முடிவெடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் கேப்டன்களில் தோனிக்கு நிகர் அவரே என்று சொல்லலாம்.

அதனால்தான் அவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று வர்ணிக்கிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக தோனியின் ஆட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

அப்போது ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்த ஒரே வீரர் தோனி தான்.

நிச்சயம் அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என நம்பி இருந்தனர்.

ஆனால் முக்கியமான ஆட்டத்தில் தடுமாறிய தோனி கடைசியில் ரன் அவுட் ஆக இந்தியாவின் உலகக்கோப்பை கனவு பறிபோனது.

இது ஒருபுறமிருக்க உலகக் கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என ஒரு தகவலும் உலாவியது.

ஆனாலும் ஓய்வு விவகாரத்தில் மவுனம் காத்த தோனி கிரிக்கெட்டில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க விரும்பினார்.

இதன் தொடர்ச்சியாக ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பணியில் களம் இறங்கினார்.

ராணுவ பணிகளில் தீவிரம் காட்டியதால் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.

இதையடுத்து வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், அந்த தொடரிலும் தோனி சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி இடம்பெறவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ராஜ்ய மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனியை தேர்வு குழுவினர் தேர்வு செய்யாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்தடுத்து வரும் தொடர்களில் தோனி புறக்கணிக்கப்படுவது அவர் ஓரம்கட்டப்படுகிறாரா?? என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதனிடையே தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டாக்குகளை பதிவிட்டு இந்த விவகாரத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே