நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது – நிர்பயாவின் தாய் உருக்கம்

நீதி தாமதமானது, ஆனால் மறுக்கப்படவில்லை என்று நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தில்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர்.

எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

அவர்களை தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை அதற்கான சிறை ஊழியர் கடந்த புதன்கிழமை காலை நடத்தினார்.

இந்நிலையில், நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டதை அடுத்து திஹார் சிறை வெளியே இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாடினர்.

ஏராளமான மக்கள் தேசியக் கொடிகளை கையில் ஏந்தியும், இனைப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறுதியாக அவர்கள் தூக்கிலிடப்பட்டனர், இது ஒரு நீண்ட போராட்டம். இன்று எங்களுக்கு நீதி கிடைத்தது.

நீதி தாமதமானது, ஆனால் மறுக்கப்படவில்லை. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

அரசுக்கும், நீதித்துறைக்கும் நன்றி. என் மகளுடைய புகைப்படத்தை கட்டிப்பிடித்து, உனக்கு நீதி கிடைத்துவிட்டது என கூறினேன்.

என் மகள் திரும்பி வரப்போவது இல்லை, ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்காகவும் எனது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே