மக்களின் அச்சத்தை போக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் – ரஜினிகாந்த்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள் சிலரும், இப்போது சிஏஏ-வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருவதோடு, இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

இதேபோல் சிஏஏவுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த், இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவா்களுடைய குடியுரிமை பறிக்கப்படப் போவதும் இல்லை.மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வருபவா்களுக்கு குடியுரிமை அளிப்பதா அல்லது வேண்டாமா என்பதைத் தீா்மானிக்கத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியா்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் சுய லாபத்துக்காகவும், சுயநலனுக்காகவும் இஸ்லாமியா்களைத் தூண்டி விடுகின்றனா். இதற்கு இஸ்லாமிய மத குருக்கள் சிலரும் துணைபோகின்றனா் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிஏஏ குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்திற்கு விளக்கம் அளித்தனர்.

ரஜினியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி,

  • போராடக்கூடிய மக்களின் அச்ச உணர்வை ரஜினி புரிந்து கொண்டார்.
  • சட்டத்தின் பாதிப்பு குறித்து அவரிடம் தெளிவாக விளக்கினோம்.
  • ரஜினி புரிந்து கொண்டார்.
  • மக்களின் அச்சத்தைப் போக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அனைத்து வகையிலும் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.
  • மதகுருக்கள் புரிந்து கொண்டு தான் போராடுவதாக எடுத்துரைத்தோம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே