டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தீவிர விசாரணைக்கு பிறகு தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

30 நிமிடங்கள் அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தனர். 

4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து, அவர்கள் இறந்ததை டாக்டர் பதிவு செய்தார்.

மக்கள் கூடியதையடுத்து திஹார் சிறை வாசலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, சிறை வாசலில் திரண்ட பொதுமக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர்.

தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள் “பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷம் எழுப்பிய மக்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே