நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு நாளை மரண தண்டனை?

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012 டிசம்பர் 16-ந்தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, நான் அந்த இடத்தில் இல்லை ஆதலால் தண்டனை நிறுத்த வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார், அக்சய் குமார் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.

டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மூன்றாவது டெத்வாரண்ட் படி நாளை காலை 5.30 மணிக்கு முன்பாக திஹார் சிறையில் 4 கைதிகளுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம்.

முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, தான் டெல்லியில் இல்லை என்று முகேஷ் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகேஷ் சிங் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் முகேஷ் சிங் தரப்பில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது.

தன்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்கக் கடைசி நிமிடம் வரை போராட முடியும். குற்றம் நடந்தபோது நான் டெல்லியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

விசாரணை அமைப்புகளிடம் முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் கூறுகையில், புதிதாக எந்தவிதமான ஆதாரங்களையும் இந்த நிலையில் பரிசீலிக்க முடியாது.

மனு தாரர் தாக்கல் செய்த மனுவில் அவருக்குச் சாதகமாக எந்தவிதமான விஷயங்களும் இல்லை, ஆதாரங்களும் இல்லை என்பதால் பரீசிலிக்க முடியாது.

கைது செய்யப்பட்டபோது தான் கார்கோலி எனும் இடத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

குற்றவாளி தனது நிலையை வெளிப்படுத்தப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன, அதை அவர் பயன்படுத்தவில்லை அனைத்து விதமான மேல்முறையீடு வாய்ப்புகளையும் பயன்படுத்தினார்.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீடுகளும் நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டன.

மனுதாரர் எழுப்பிய அனைத்து விவரங்களையும் பரிசீலிக்க இயலாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மறு ஆய்வு மனுவும், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

ஒரு வழியாக 7 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே