திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தற்காலிகமாக ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பிரம்மோற்சவம், வைகுந்த ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை எட்டும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்தியாவில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 4 பேர் பலியாகிவிட்டனர்.

இதையடுத்து மக்கள் கூடும் சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், புராதன சின்னங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அது போல் தமிழகத்திலும் தஞ்சை பெரிய கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொருத்தவரை கொரோனா பரவலை தடுக்க மக்களை காத்திருப்பு அறைகளில் வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுப்பியது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிகமாக தடை விதித்துள்ளது ஆந்திர அரசு.

எத்தனை நாட்களுக்கு என்பது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

எனினும் தற்போது கோயிலுக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதி வரை 300ரூ கொடுத்து ஏற்கெனவே ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுமா என்பது குறித்து நிர்வாகம் கூறவில்லை.

அது போல் அன்றாட சேவைகளுக்கு பணம் கட்டியோரின் நிலையும் தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே