தோல்வி பயத்திலேயே தி.மு.கவுக்கு எதிராக செய்தித்தாள்களில் விளம்பரம்… மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தோல்வி பயத்திலேயே தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.க விளம்பரம் வெளியிட்டுள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முழுவதும் சென்னையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

அந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடே இன்று காலை அனைத்து பத்திரிகைகளிலும் முதல்பக்கத்தில் விளம்பரத்தை கொடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி அ.தி.மு.க. அப்படி எங்கள் மீது தவறு இருந்திருந்தால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீங்கள் பொய்யான செய்தியை முதல்பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை திசை திருப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள்.

குட்டிக்கரணம் போட்டாலும், ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது. ரவீந்தரநாத்திற்கு இன்று டாடி ஓ.பன்னீர் செல்வம் அல்ல. மோடிதான் அவரின் டாடி. அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகளில் நடந்த கொடுமைகளை எல்லாம் மக்கள் மறந்துவிடவில்லை. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றது அ.தி.மு.க காவல்துறை. இன்றைக்கு பொள்ளாச்சி என்றாலே கை , கால் எல்லாம் நடுங்குகிறது. இளம்பெண்களை எல்லாம் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தது அதிமுக அரசின் முக்கிய பதவியில் உள்ள முக்கிய பிரமுகர் தொடர்புடைய நபர்கள். எஸ்.பிக்கே பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது அ.தி.மு.க அரசின் சிறப்பு டி.ஜி.பி.

எந்த ஆட்சியிலும் சிறப்பு டி.ஜி.பி என்ற பொறுப்பு கிடையாது. இதுபோன்ற பல அவலங்களை மூடி மறைத்துவிட்டு இன்றைக்கு முதல்பக்க விளம்பரம் கொடுத்துள்ளனர். நான் முதல்வர் ஆகவேண்டும் என்றோ, உதயநிதி எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்றோ தேர்தல் இல்லை. நம்முடைய தன்மானம் காக்க வேண்டும். சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேண்டும். இழந்த உரிமைகளை, தன்மானத்தை, உரிமைகளை மீட்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின், தி.மு.க தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி, கலைஞரின் பெயரனாக போட்டியிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்காக நான் வாக்கு சேகரிக்கும்போது, எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. நான் முதன்முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும்போது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் ஊரெல்லாம் ஓட்டு கேக்குற உன் பிள்ளைக்காக ஓட்டு கேக்க மாட்டியான்னு மக்கள் கேப்பாங்கன்னு நான் வந்தேன் என்று கருணாநிதி சொன்னார். அதுபோல, உதயநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். கருணாநிதி இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அன்பழகன் வெற்றி பெற்ற தொகுதி. உதயநிதியை வெற்றி பெற வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே