நாட்டின் சிறந்த முதல்வராக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின் – குலாம்நபி ஆசாத்

‘நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். தந்தையைப் போலவே மகனும் சிறப்பாக செயல்படுகிறார்’ என்று இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், அவரது மனைவி ஷமிம் ஆசாத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பின் போது முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ் இளங்கோவன், கனிமொழி ஆகியோர் இருந்தனர். சந்திப்புக்குப் பிறகு குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தேன். தனிப்பட்ட முறையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. குறிப்பாக மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு இப்போது தான் முதன் முறையாக சந்திக்கிறேன்.

அவர் முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு குடும்பத்திற்கு இடையே 1978 முதல் உறவு நீடிக்கிறது. தற்போது 43 ஆண்டு கால உறவாக இந்த உறவு தொடர்கிறது. இரு குடும்பத்தின் உறவு தொடரும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளொன்றுக்கு 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். நம் நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தந்தையை போல மகனும் சிறப்பாக செயல்படுகிறார். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே