நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடுகள் நடைபெற்றதும், தொடர்புடைய பெற்றோர்கள், மாணவர்களை கைது செய்ததும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதக்கூடிய அறைகளில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்படும்.
தேர்வெழுதும் மாணவர்கள் வீடியோ பதிவு செய்யப்படுவர்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்வு மையத்தில் மாணவர்களின் இடது பெருவிரல் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
இம்முறை அந்த நடைமுறை மாற்றப்பட்டு விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுடைய இடது பெருவிரல் கைரேகையை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .
முறைகேடுகளை தடுக்க புதிய வழிமுறையாக போஸ்ட் கார்ட் அளவு உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பபிக்கும் போது பதிவேற்றும் பாஸ்போர்ட் அளவு மற்றும் போஸ்ட் கார்ட்டு அளவு புகைப்படத்தின் மீது மாணவரின் பெயர் பிறந்த தேதி, புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் ஆகியவை இடம்பெறக்கூடிய வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில அறிவிப்புகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ஜிப்மர், எய்ம்ஸ், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றுக்கான இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வினை இந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு பின் வெளியிடப்படும் விடைக்குறிப்புகளில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முற்றிலும் தவறு என்பது உறுதியானால் குறிப்பிட்ட கேள்விக்கான விடை எழுதாதவர்கள் உட்பட அனைவருக்கும் கேள்விக்கான முழு மதிப்பெண்ணான 4 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.