கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த “கூகுள்” நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் அளித்து வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார் என்று கூறியுள்ளனர்.
- கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
- அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
- ஆல்பபெட் குழுவில் அவர் இணைவது எனக்கு உற்சாகமளிக்கிறது என லாரி பேஜ் புகழாரம் சூடியுள்ளார்.
சுந்தர் பிச்சை, சென்னையில் பள்ளிப்படிப்பையும், காரக்ப்பூர் ஐஐடி-யில் இளங்கலை பொறியியல் பட்டத்தையும் பெற்றவர்.
தொடர்ந்து கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்.
தனது கடின உழைப்பால் கூகுள் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.