பிரதமர் மோடி உபயோகப்படுத்தும் ‘ஆத்மநிர்பார்தா’ வார்த்தைக்கு புதிய அங்கீகாரம்..!!

கடந்த, 2020ம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்தி வார்த்தையை, ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு அறிவித்துள்ளது. ‘ஆத்மநிர்பர்தா’ எனப்படும், தற்சார்பு என்ற வார்த்தை தான், சிறந்த வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு அகராதி குழுமத்தின் ஆக்ஸ்போர்டு மொழிகள் என்ற அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த வார்த்தைகளை தேர்வு செய்து வருகிறது.

அதன்படி, ஹிந்தி மொழியில் மிகச் சிறந்த வார்த்தைகளாக, 2017ல், ஆதார்; 2018ல் நாரி சக்தி; 2019ல் சம்விதான் தேர்வு செய்யப்பட்டன.

அந்த வகையில், 2020ம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்தி வார்த்தையாக, ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிஉள்ளதாவது:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த நிலையில், கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்த நிலையில், அவற்றில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கூறிய, ஆத்மநிர்பர்தா என்ற அந்த வார்த்தை, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு, பொருளாதாரம், சமூகம் மற்றும் தனிநபர்கள் சுயமாக பிரச்னைகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

அது, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றத்தையும் தந்துள்ளது.

இந்திய மக்களின் குரலாக விளங்கியதால், 2020ம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்தி வார்த்தையாக, ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே