தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் கச்சதீவு பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ரமேஸ்வர மீனவர்கள் 4 பேர், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து திமுக மற்றும் அதிமுக எம்.பிக்கள் மாநிலங்களவையில் விவாதித்தனர்.

அவையில் பேசிய திருச்சி எம்.பி சிவா, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொலை செய்து விட்டதாகவும் இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழிலையே கைவிட யோசிப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதே போல, அதிமுக எம்.பி தம்பிதுரையும் தனது கண்டனக் குரலை அவையில் பதிவு செய்தார். 

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து அரசு விரைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், மீனவர்கள் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே