திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக இருந்து வந்தார்.

இவர், வெள்ளவேடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து கருணாகரனை சுற்றிவளைத்தது.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அக்கும்பல் தப்பியது.

இதில் பலத்த வெட்டுகாயங்களுடன் சரிந்துவிழுந்த கருணாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து செல்ல முற்பட்டபோது, சடலத்தை எடுக்க விடாமல், கருணாகரனின் உறவினர்கள் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், கருணாகரனின் உடலை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.

கருணாகரன் கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே