தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

வரலாற்றில் காலம்தோறும் நாடுகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் மாறிவந்திருக்கிறது.

நாடுகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் வரலாற்றில் கல்வெட்டு காலம் முதல் அச்சு எழுத்து முறை வந்த பிறகு எழுதும் முறையிலும் அதன் உச்சரிப்பு முறையிலும் மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது.

அதேபோல, ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு, அவர்களுடைய நிர்வாக முறையில், பல ஊர்களின் பெயர்கள் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பு முறைக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்துள்ளன.

அவ்வாறு மாற்றப்பட்ட சில ஊர்களின் பெயர்கள் முழுவதுமாக வேறாகவும் இருந்தன.

இந்தியாவுக்கு வரலாற்றில் பல்வேறு பெயர்கள் இருந்துள்ளன.

நாவலந்தீவு, பரத கண்டம், பாரதம், இந்தியா என்று பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடுகளின் பெயர்கள் ஊரின் பெயர்கள் அதன் உச்சரிப்பு முறை, அதை எழுதும் முறை மக்கள் பண்பாட்டில், அரசு மாற்றங்களின்போது மாறுவது என்பது நிகழக்கூடிய ஒன்றுதான்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு, இந்த இடைப்பட்ட கால கட்டங்களில் தமிழகத்தில் படிப்படியாக அரசு நிர்வாகங்களில் ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பும் ஆங்கில உச்சரிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, இன்றைய செங்கல்பட்டு மாவட்டம், பிரிட்டிஷ் ஆட்சியில், chingliput District என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர், chengalpattu என்று மாற்றம் பெற்றது.

அதே போல, வரலாற்றில் திரிசிறாப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ள இன்றைய திருச்சிராப்பள்ளி மக்கள் வழக்கில் திருச்சி என்றும் அழைக்கப்பட்டு எழுத்துமுறையிலும் புழக்கத்தில் உள்ளது.

அதே போல, இன்றைய உதகமண்டலம் முன்பு ஒத்தைக்கல் மந்து என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் ஒத்தைக்கல் மந்து என்பதை அவர்களின் உச்சரிப்பில் ootacamund (ஊட்டகாமண்ட்) என்று எழுதிவிட்டனர்.

பின்னர், திமுக ஆட்சியில், ஊர்ப்பெயர்களை தமிழ்ப்படுத்துவதாக நினைத்து உதகமண்டலம் என்று மாற்றினார்கள்.

ஆனால், இதில் ஒத்தைக்கல் மந்து என்ற பழங்குடி இன மக்களின் அடையாளம் மறைந்துபோனதை எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை முதலில் மதறாஸ், மதராஸ், மதராஸ் பிரெஸிடென்ஸி, மதராஸ் பட்டனம், சென்னை பட்டனம், பின்னர் இன்றைய சென்னை என்றாகி இருக்கிறது.

அதே போல, கோயம்புத்துத்தூர் என்பது ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபடி Coimbatore என்று அரசு நிர்வாகத்தில் எழுதிவிட்டனர்.

இந்த பெயரை உண்மையில் தமிழ் உச்சரிப்புப்படி ஆங்கிலத்தில் எழுத வேண்டுமானல் Coyambuththoor என்றுதான் எழுத வேண்டியிருக்கும்.

அதே போல, செஞ்சி என்ற ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் உச்சரிப்புபடி Gingee என்றே ஆங்கிலத்தில் அரசு ஆவணங்களில் பதிவாகி வருகிறது.

உண்மையில், அதனை தமிழ் உச்சரிப்புபடி, ஆங்கிலத்தில் எழுத வேண்டுமானா Senji என்றே எழுத வேண்டும்.

அதே போல, வந்தவாசி என்பதை வரலாற்றில் ஆங்கில அவணங்களில் Wandiwash என்றே குறிப்பிடப்படுகிறது. பின்னாளில் இது மாற்றமடைந்தது.

இதே மாதிரி தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் அன்றைய ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபடி ஆங்கிலத்தில் எழுதிய வடிவத்திலேயே இன்றைய தமிழ அரசு ஆவணங்களிலும் தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசு பல்வேறு கால கட்டங்களில் இந்த ஊர்களின் பெயர்கள் அதை தமிழ் உச்சரிப்பு முறைப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு அரசாணை வெளியிட்டு மாற்றியுள்ளது.

அந்த வகையில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தமிழ்நாட்டிலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் தமிழகம் முழுவதும் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பு படி ஆங்கிலத்தில் அமையுமாறு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை மாவட்டத்தில், தண்டையார்பேட்டை இதற்கு முன்பு Tondiyarpet என்று இருந்ததை Thandaiyaarpettai என்று மாற்றி பரிந்துரைத்துள்ளது.

பெரம்பூர் Perambur என்று இருந்ததை Peramboor என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் என்பதை இனி Mayilaappoor என்றும் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.

அதேபோல, கோயம்புத்தூர் என்பது இதுவரை Coimbatore என்று இருந்ததை தமிழ் உச்சரிப்புபடி இனி Coyambuththoor என்று மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது போல சென்னை, கடலூர், தருமபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி,கோவை, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புபடி ஆங்கிலத்திலும் அமையுமாற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே