புதிய வேளாண் மசோதா; இந்திய அரசின் விவசாயச் சட்டங்கள் சொல்வது என்ன? அவை ஏன் எதிர்க்கப்படுகின்றன?

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?

மொத்தம் மூன்று சட்டங்கள்.

1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,

2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,

3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.

இவை ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 என அழைக்கப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.

இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது.

உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.

இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது.

இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது.

இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.

ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது.

வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.

மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது.

மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது.

ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.

விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் என்றால் என்ன?

விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது.

விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும் தமிழ்நாடு அராசல் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து இந்த ஒழுங்கு முறைக் கூடங்களை உருவாக்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும் 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன.

நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.(கோப்புப்படம்)

இந்த விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். பொருட்கள் வாங்கப்பட்டவுடன் விவசாயிக்கு பணம் அளிக்கப்பட்டுவிடும்.

இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறையானது தமிழ்நாட்டைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை வாங்க முடியும்.

ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம் விதிக்கப்படுகிறது.

வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய முயல்வார்கள். சில சமயங்களில் களத்திலேயே பொருட்களை கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும்.

இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் செய்வதை ஒரு சட்டம் உறுதிப்படுத்துகிறது.

“ஏற்கெனவே கரும்பு இந்த வகையில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, விவசாயிகள் கரும்பைப் பயிட்டு, ஆலைக்கு அளிக்கிறார்கள்.

ஆனால், ஆலைகள் பணம் தர தாமதம் செய்வதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி நடந்தால், சிறிய விவசாயியால் என்ன செய்ய முடியும்? நிறுவனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஆய்வாளர் டாக்டர் ஜெயரஞ்சன்.

இந்த மூன்று சட்டங்களையும் தனித்தனியாக பார்க்க முடியாது. ஒன்றாக இணைத்துதான் பார்க்கவேண்டும்.

சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் நிறுவனங்கள் பெரிய அளவில் தானியங்களை வாங்கி சேமிப்பார்கள்.

ஆனால், அப்படி செய்ய முடியாத அளவுக்கு சட்டம் இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை நீக்கத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

இந்தக் கவலைகள் தவிர, தற்போது அரசு விவசாய விளைபொருட்களுக்கு அறிவித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது, இனியும் தொடரும் என்பதை இந்தச் சட்டங்கள் உறுதிசெய்யவில்லை என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்கள் மாநிலங்களவையில் விவாதிக்கப்படும்.

அங்கும் அவை நிறைவேற்றப்பட்டால், பிறகு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு இந்த சட்டம் செயல்வடிவம் பெறும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே