திருவாரூர் அருகே மடப்புரம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கியதும், அதில் இருந்த ஒருவர் பையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பெயர் சுரேஷ் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு சுரேசை கைது செய்துள்ள போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுரேஷ்-இன் உறவினர்கள் 3 பேரையும் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பிடிபட்ட மணிகண்டன், நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றை பார்த்துவிட்டு கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மணிஹேஷ்ட் (MONEY HEIST) என்ற பிரபலமான க்ரைம் தொடர் வெளியாகின்றது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மத்திய வங்கியை கொள்ளை அடிப்பதற்கு கும்பலாக திட்டமிடுவதும் பிறகு கொள்ளை அடிப்பதும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.
வங்கி கொள்ளையர்களிடையே இந்த தொடர் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரை பார்த்துதான், மணிகண்டன் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவர் லலிதா ஜுவல்லரி கொலை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முருகனை பற்றி தான் தற்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.