BREAKING : நீட் ஆள்மாறாட்டம்: ஒரே நேரத்தில் ஒருவர் பெயரில் 2 பேர் தேர்வெழுதியது அம்பலம்

நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரவீன் ராகுல் ஆகியோர் தமிழகத்தில் தேர்வு எழுதிய அதே நேரத்தில் அவர்கள் பெயரில் இரு வேறு நபர்கள் டெல்லி மற்றும் லக்னோவில் தேர்வு எழுதியது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் இதுவரை 7 பேரை கைது செய்திருக்கிறது.

அவர்களில் பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர்களது பெயரில் இரண்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு விண்ணப்பங்களை கொடுக்க முடியாது.

ஆனால் இவர்கள் இருவரும் விண்ணப்பங்களை கொடுத்து உள்ளனர்.

அதாவது தமிழகத்தில் ஒன்றும், வேறு மாநிலத்தில் ஒன்றும் என ஒரே நேரத்தில் இரண்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் தங்கள் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் மூலமாக விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள்.

பிற மாநிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் இவர்களது பெயர் மற்றும் ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்ட நபரின் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பம் கொடுத்து இருக்கின்றனர்.

ஓரிடத்தில் பொதுப் பிரிவிலும், மற்றொரு இடத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் விண்ணப்பித்து உள்ளனர்.

பிரவின் சென்னையில் தேர்வு எழுத, அதே நேரத்தில் அவர் பெயரில் வேறு ஒருவர் டெல்லியில் தேர்வு எழுதி இருக்கிறார்.

அதே போல ராகுல் கோவையில் தேர்வு எழுத, அதே நேரத்தில் அவர் பெயரில் லக்னோவில் ஒருவர் எழுதியிருக்கிறார். இதில் பிரவின் மற்றும் ராகுல் ஆகியோர் நீட் தேர்வில் தோல்வி அடைய, அவர்களுக்கு பதில் தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்று விட்டனர்.

இதனைப் பயன்படுத்தி இருவரும் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே