காதலிக்காக இதையெல்லாமா திருடுவாங்க..??

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் சித்ரகூட் நகரைச் சேர்ந்த அவினாஷ், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் காதலர்கள் இருவரும் இரவு நேரம் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது காதலி சாக்லெட் சாப்பிட வேண்டும் போல் உள்ளது என்று அவினாஷிடம் கூறினார்.

உடனே காதலியின் ஆசையை நிறைவேற்ற கடை வீதிக்கு அவினாஷ் சென்றார். அன்றிரவு வெகுநேரம் ஆனதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

வேறுவழியின்றி காதலியின் ஆசையை நிறைவேற்ற அப்பகுதியில் இருந்த கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தார்.

அதிலிருந்து  ரூ .5 முதல் ரூ .300 வரையிலான (ரூ. 20,000 மதிப்புள்ள) 700 சாக்லெட்டுகளை திருடிக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அடுத்தநாள் காலை வழக்கம் போல் கடையின் உரிமையாளர் ரிஷாப் ஜெயின் கடையை திறக்க முயன்ற போது கதவுகள் உடைக்கப்பட்டு சாக்லெட் மட்டும் திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும், கடைக்கு வெளியே வைத்திருந்த சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் மற்ற கடைகளின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு விசாரணை நடத்தினர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவினாஷை பிடித்து விசாரித்தனர்.

அவர், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘​​அவினாஷின் காதலி, இரவு நேரம் என்று கூட பாராமல் அவனிடம் சாக்லெட் கேட்டு வற்புறுத்தி உள்ளார்.

அதையடுத்து தனது நண்பன் ஒருவனின் ஆலோசனையை கேட்டு கடைக்குள் புகுந்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாக்லெட்டுகளை அள்ளிச் சென்று காதலியிடம் கொடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து கொஞ்சம் சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு, அவரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே