நீட் ஆள்மாறாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் வரும் 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் கவுன்சிலிங் மூலம் நிரப்ப கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக 5 மாணவர்களும், இடைத்தரகர் ஒருவரும் சிக்கி இருப்பதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், தேசிய அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் ஒரே ஒரு இடைத்தரகர் தான் சம்மந்தப்பட்டு இருக்கிறார் என கூறுவதை நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்.

அதிகாரிகள் துணை இல்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறிய நீதிபதிகள், ஆள் மாறாட்டத்தில் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நீட் தேர்வு எழுத ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது போல கை ரேகையையும் ஏன் கட்டாயமாக்க கூடாது என்றும் நீதிபதிகள் என்றும் கேள்வி எழுப்பினர்.

எத்தனை மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றும், எவ்வளவு பணம் கைமாறியது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆள் மாறாட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யார் யார் என வரும் 15-ஆம் தேதிக்குள் பதில் தர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே