வன்முறை நடைபெற்ற பகுதிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு

டில்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

டில்லியில் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களும், ஆதரவாக போராடியவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் இரவு மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியது.

ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இந்த வன்முறையில் நேற்று வரை 13 பேர் உயிரிழந்த நிலையில், குரு தேஜ் பிரதாப் மருத்துவமனைக்கு இன்று மேலும் 4 பேர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர். 

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டில்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், முதல்வர் கெஜ்ரிவால், டில்லி கவர்னர் அனில் பைஜால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா மற்றும் டில்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 3வது ஆலோசனையாகும்.

டில்லியில் அமைதி திரும்ப வேண்டி, மஹாத்மா காந்தி சமாதியில் கெஜ்ரிவால் பிரார்த்தனை மேற்கொண்டார்.

கலவரத்தில் காயமடைந்த போலீஸ் துணை கமிஷனர் அமித்ஷர்மாவின் உடல்நிலை குறித்து அவர்களது குடும்பத்தினரிடம், அமித்ஷா கேட்டறிந்தார்.

டில்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் 35 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நுழைவு மற்றும் வெளியேறும் வழி திறக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக டில்லி மெட்ரோ ரயில் கார்பரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே