டாக்டே புயல் பாதிப்பு – குஜராத்திற்கு ரூ.1,000 கோடி நிதியுதவி..!!

‘டாக்டே’ புயலால் சேதத்தை சந்தித்துள்ள குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி விமானம் மூலம் ஆய்வு செய்தார். பின்னர் அவர், புயலால் பல மாநிலங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த ‘டாக்டே’ புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் குஜராத் சென்றடைந்தார். பவ் நகர் வந்த அவரை, முதல்வர் விஜய்ரூபானி வரவேற்றார்.

பின்னர், புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட உனா, டியூ, ஜபராபாத், மஹூவா உள்ளிட்ட பகுதிகளை மோடி விமானம் மூலம் பார்வையிட்டு பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர், மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்ரூபானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அவர்கள், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரண பணி ஆகியவை குறித்து விளக்கினர்.

இதன் பின்னர் டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: ‘டாக்டே’ புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய அரசு துணை நிற்பதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் அரசு உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும்.

மாநிலத்தில் பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழுவை குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே