செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் புகைப்படம்..!!

அமெரிக்காவின் நாசா அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

பூமியை தொடர்ந்து செங்கோளான செவ்வாய்கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆராய்ச்சியை மனித குலம் தீவிரப்படுத்தி இருக்கிறது.

அந்த வரிசையில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது.

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது.

7 மாத பயணத்தை அடுத்து வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்து, அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது.

இந்நிலையில், விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து ரோவர் 7 நிமிடங்களில் தரையிறங்கியது. சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர்.

இதன்பிறகு செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது.

வெற்றிகரமாக ரோபோட்டிக் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதை பார்த்து நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் 5 மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும்.

இதற்கு முன்பு ஆற்றுப்படுகை இருந்த இடமாக கருதப்படுவதால் , இங்கு கிடைக்கும் மாதிரிகள் செவ்வாய் கிரகம் குறித்த பல புதிய தகவல்களை நமக்களிக்கும் என நம்பப்படுகிறது.

இதற்காகவே ரோவரில் துளையிடும் வகையில் 7 அடி நீள கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031ஆம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

செவ்வாயில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள். எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பும் திட்டம் இருப்பதால், கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோவருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன் வெற்றியை பொறுத்து மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா வகுக்கும்.
இது தவிர சுமார் 2 கிலோ எடை கொண்ட குட்டி ஹெலிகாப்டரும் இத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாக செவ்வாயில் பறந்தால், பூமிக்கு வெளியே ஹெலிகாப்டரை பறக்க செய்த சாதனையை நாசா படைக்கும். இந்த மாதத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே