சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெரியரில் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஓர் அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 20 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இரண்டு பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பலருக்கும் 80 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலரும் உயிரிழந்தனர்.

இன்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெயந்திமாலா என்பவர் உயிரிழந்தார்.

இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே