மேகாலயா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

தொடர்ந்து 12 நாட்களாக விலை உயர்ந்ததால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும், மத்தியப் பிரதேசத்தின் அணுப்பூரிலும் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது.

பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் லிட்டர் ரூ.92 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. டீசல் விலையும் லிட்டர் ரூ.86க்கு மேல் உயர்ந்துவிட்டது.

இதையடுத்து, மக்கள் படும் சிரமங்களை எண்ணி வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தன.

மேகாலயா அரசு கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீது தலா ரூ.5 குறைக்க முதல்வர் காம்ராட் சங்மா உத்தரவிட்டார்.

அதற்கு முன்னதாக, கடந்த 12-ம் தேதி அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைத்து அறிவித்தன.

இதனால் இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

இந்நிலையில், நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து நேற்று இரவு அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி ரூ.29 சதவீதத்திலிருந்து 25 ஆகவும், டீசல் மீதான வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.22 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 57 பைசா வரையிலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே