குறைந்தது கச்சா எண்ணெய்… குறையவில்லை பெட்ரோல், டீசல் விலை..

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஆனால், அதற்கு ஏற்றாற்போல பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட வில்லை.

அதனால் அதற்குக் கண்டனம் தெரிவித்து பா.ம.க தலைவர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா பாதிப்பு காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறைந்திருப்பதால், அதன் உற்பத்தியும் குறைந்துள்ளது. 

இருப்பினும் சவுதி அரேபியா அதிகமாக உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைகிறது. அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கொடுக்க மறுக்கின்றன.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த மாதம் கச்சா எண்ணெய் விலை அதிக அளவு குறைந்துள்ளதால் அதனுடன் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன், தமிழக அரசின் வரி உள்ளிட்டவற்றைப் போட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37க்கு மட்டுமே விற்க வேண்டும்.

ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுவது மிகவும் அநியாயம். அதே போல டீசலின் விலையும் ரூ.21.20 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

இயல்பாக விற்க வேண்டிய விலையை விட மத்திய அரசும் மாநில அரசும் வரிக்காக அடக்க விலையைக் காட்டிலும் 4 மடங்கு உயர்த்தி விற்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை குறைந்ததைக் கணக்குக் காட்டாமல் ஒரு லிட்டருக்கு ரூ.15 எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

இந்த லாபத்தின் பெரும் பகுதியை அரசின் கணக்கில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைவை அரசு மட்டுமே அனுபவிக்கக் கூடாது.

மக்களும் சேர்த்து அனுபவிக்க வேண்டும்.

எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ரூ.20 குறைக்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களிலும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதற்கு ஏற்றாற்போல விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே