உச்ச நீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று அவருக்கு நடந்த பிரியாவிடை நிகழ்வில் திருப்தியுடன் விடைபெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக பாப்டேவின் பரிந்துரையை ஏற்று என்.வி ரமணாவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சமூக இடைவெளியுடன் இன்று நடந்த நிகழ்வில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்.வி.ரமணா. அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, கடந்த 40 வருடங்களாக நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.

2000 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும், 2013 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் வரும் 2022 ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். ஆந்திர மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற இரண்டாவது நபர் பி.வி.ரமணா. இதற்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த சுப்பா ராவ் 1966-67 வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே