கொட்டும் மழையில் நனைந்தபடி 7 மணி நேரம் சாலையில் போக்குவரத்துக்கு உதவிய பெண்

மும்பையில் 7 மணி நேரம் மழையில் நனைந்தவாறு சாலையிலிருந்த புதைசாக்கடைத் திறப்புக்குள் யாரும் விழுந்துவிடாமல் எச்சரித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்க, மாநகராட்சி ஊழியர்களோ வசைபாடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் – அரசு எந்திரம்!

மும்பையில் மாதுங்கா பகுதியில் ஆக. 4 ஆம் தேதி கடும் மழை பெய்துகொண்டிருந்த நிலையில், கடலாகத் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற சாலையிலுள்ள புதைசாக்கடைத் திறப்பைத் திறந்துவிட்ட இந்தப் பெண், ஏறத்தாழ 7 மணி நேரம் அந்த இடத்தில் மழையில் நனைந்தவாறு யாரும் உள்ளே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக எச்சரித்து வழிமாற்றிவிட்டுக் கொண்டிருந்தார்.

மாதுங்கா பகுதியில் பூ விற்கும் காந்தா மூர்த்தி என்ற இந்தப் பெண்மணியின் செயலின் காணொலி, சமூக ஊடகங்களில் பெருமளவில் பரவி வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

யார் இந்தப் பெண் என்று வியந்துகொண்டிருந்த நிலையில், அவரைத் தேடிச் சந்தித்தபோது, காந்தா மூர்த்தி கூறுகிறார்:

“பிழைப்புக்காகவும் என்னுடைய மூன்று குழந்தைகளின் கல்விக்காகவும் நான் பூ விற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மற்ற ஐந்து குழந்தைகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர்.

என்னுடைய கணவர், ரயில் விபத்தொன்றில் சிக்கி ஊனமுற்றதுடன் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டவர். அவரால் உழைக்க இயலாது.

“அன்றைய நாளில் நகரில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர். மக்களால் நடமாடவே முடியவில்லை. கடல் போல நின்ற தண்ணீரில் சில வாகனங்கள் மிதக்கத் தொடங்கிவிட்டன.

என்னுடைய வீட்டிலிருந்த பொருள்களெல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வேறு வழி தெரியவில்லை.

சாலைக்கு வந்து புதைசாக்கடைத் திறப்பை அகற்றித் தண்ணீரை வெளியேறச் செய்துகொண்டிருந்தேன்.

“தண்ணீர் வெளியேறத் திறந்திருந்த குழியில் யாரும் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அங்கேயே நின்று வரும் வாகனங்களையும் மக்களையும் எச்சரித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், பின்னர் வந்த மும்பை மாநகராட்சி அலுவலர்களோ என்னைக் கடிந்துகொண்டனர்.

“அந்த இடத்தில் நான் 7 மணி நேரம் நின்றுகொண்டிருந்தேன். மக்கள் எல்லாம் பாராட்டினார்கள். சிலர் குடைகளைத் தந்தார்கள்.

ஒரு காவல்துறை அலுவலரே ஊக்குவித்துச் சென்றார். வெள்ளம் பெருகியதும் மக்கள் எல்லாம் மாநகராட்சி அலுவலர்களைத்தான் அழைத்தார்கள்.

ஒருவரும் திரும்பிப் பார்க்கவில்லை. மறுநாள் வந்தவர்கள் என்னைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.

“திறப்பை அகற்றியபோது, 2017 ஆகஸ்ட்டில் இதேபோன்ற புதைசாக்கடைத் திறப்பில் விழுந்து ஒருவர் இறந்தது எனக்கு நினைவுக்கு வந்தது.

எனவேதான், அந்த இடத்தைவிட்டு நகராமல் நின்று அனைவரையும் எச்சரித்து வழிமாற்றிக் கொண்டிருந்தேன்” என்றார் காந்தா மூர்த்தி.

ஒரே நாள் – தன்னலம் கருதா தனது செயலால் நாடெங்கும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் காந்தா மூர்த்தி!

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே