திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைகட்சித் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நேற்று நிறைவு செய்தார். . அப்போது அவர் பேசியது:
சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையிலும், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளை கசக்கிப் பிழியும் சுங்கச்சாவடி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளேன். அதற்காக சிறையும் சென்றிருக்கிறேன். வாகன ஓட்டிகள் எந்தளவுக்கு சுங்கச்சாவடிகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்த காரணத்தால் அவர்களுக்காக குரல் கொடுத்தேன்.
சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க தொடர்ந்து பாடுபடுவேன். தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் எனது நினைவு வரும். சிறு தானியங்கள், காய்கனிகள் விற்பனையின் மையமாக விளங்கும் பண்ருட்டியை விளைபொருள் கேந்திரமாக உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வழிவகை ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சிறு குறு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.