காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று (அக்டோபர் 12) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடன் இருந்தார்.

பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் நடந்த நிகழ்வில் குஷ்பு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மாற்றம் என்பது நிலையானது, இப்போது எனது புரிதல் மாறியுள்ளது என்று காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்தது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி அளிப்பதாகவும் பாஜகவில் சேர்ந்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோதி போன்ற ஒரு தலைவர் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன்,

இந்தியாவில் பல கோடி பேர், பிரதமர் நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி தமக்கான தலைமையையே கண்டுபிடிக்க முடியாத சூழலில் எப்படி நாட்டைக் காக்க முடியும் என்று காங்கிரஸை விமர்சித்தார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவை கடுமையாக விமர்சித்தது குறித்து பேசிய அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவ்வாறு விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று குறிப்பிட்டார்.

ஒரு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தபோது கட்சியின் நிலைப்பாடு குறித்து, தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை மீறி பேச வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நடிகை குஷ்புவும் அவரது கணவர் சுந்தர். சியும் சந்தித்தனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸில் சேரும் முன்னர், நான்கு ஆண்டுகள் திமுகவில் இருந்தவர் குஷ்பு. இது குஷ்பு சேரும் மூன்றாவது அரசியல் கட்சி.

கடந்த ஆறு மாத காலத்தில் பெண்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

நரேந்திர மோதி ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று இந்த நிகழ்வின் போது தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்தார்.

இந்திய வருவாய் பணியில் (ஐஆர்எஸ்) இருந்து 2017ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.

குஷ்பு விலகல் காங்கிரஸ் என்ன சொல்கிறது?

“குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார். குஷ்பு கட்சியில் இருந்தபோதும் கொள்கைப் பிடிப்புடன் செயல்படவில்லை,” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஒரு நடிகை என்பதற்காக அவரை பார்த்து ரசித்தார்களே தவிர, ஓர் அரசியல் தலைவர் எனக் கருதி அவரை யாரும் பார்த்தது கிடையாது, என திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

“கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்கு விரோதமாக, கட்சியின் கருத்துகளுக்கு விரோதமான செயல்களில் குஷ்பு ஈடுபட்டு வந்தார். ராகுல்காந்தியின் அறிக்கைக்கு மாறாக தொடர்ச்சியாக பல நேரங்களில் அவர் கருத்து வெளியிட்டு வந்தார்” என்று கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுகவில் தொடங்கிய குஷ்புவின் அரசியல் பயணம்

2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் குஷ்பு. பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியில் இருந்து விலகினார்.

“திமுகவில் கடின உழைப்பு என்பது ஒருவழிப் பாதையாக மட்டுமே உள்ளது,” என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

திமுகவில் இருந்து விலகிய சில மாதங்களில், அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு, “நான் என் வீட்டை வந்தடைந்ததைப் போல உணர்கிறேன்,” என்று கூறினார்.

அந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்திதொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட குஷ்பு, இன்று, (திங்கள்கிழமை) காலை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நிகழவுள்ள நிலையில், குஷ்புக்கு கட்சிப் பொறுப்பு அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏதேனும் பாஜகவால் வழங்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும் .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே