சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் திருப்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பே நடத்தாத நிர்வாகம்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்ததால், தேர்தல் பணிகள் தொடர்பாக நடந்து வரும் விஷயங்கள் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தலின் போது வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும். இதன்மூலம் பல்வேறு விஷயங்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியவரும். ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவில்லை. அனைத்து தகவல்களும் செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் ’செய்திக் குறிப்பாக’ மட்டுமே தரப்படுகிறது. இதனால் தேர்தல் தொடர்பான பிற சந்தேகங்களை கேட்டுப்பெற முடியாத நிலைக்கு இம்முறை அனைவரும் தள்ளபட்டனர்.

குறிப்பாக பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாகவும், புகார்களின் நிலை குறித்தும் எதுவும் கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடங்கி தொடங்கி, வாக்களிக்க பண விநியோகம், மதுபாட்டில்கள் பதுக்கல், வழிபாட்டுத் தலத்துக்குள் சென்று வாக்கு சேகரிப்பு, உதயநிதி மீதான புகார், வேட்பாளர் செலவு விவரங்கள், தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உட்பட தேர்தல் பணிக்காக தங்கியுள்ள வெளி மாநிலத்தவர் வெளியேற்றம், தாராபுரத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னம்போன்று பேனா சின்னத்தை வடிவமைத்திருப்பது, உட்பட பல்வேறு தகவல்கள் எதுவும் கேட்டப்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த முறை இப்படி இல்லை. தற்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

தேர்தல் காலகட்டம் என்பதால், மாவட்ட தேர்தல் அலுவலராக இருக்கக்கூடிய ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தான், முழு அதிகாரம் பெற்றவர். ஆனால் மற்ற மாவட்டங்களை போல், தேர்தல் பணிகள் மற்றும் விளக்கங்களை அளித்திருக்கலாம் என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே