அதிமுக பணத்தை வாரி இறைத்தாலும் நிச்சயமாக வெற்றி பெற முடியாது: கே.பாலகிருஷ்ணன் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரைக்கான, இறுதிகட்ட தேர்தல் பணிகள் குறித்து புதுக்கோட்டையில் கட்சியினருடன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று ஆலோசனை செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழனின் மொழி உரிமையை, இட ஒதுக்கீட்டு உரிமையை, மனித உரிமையை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு உடந்தையாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இருந்து வருகிறது.

இழந்த உரிமைகளை மீட்டெடுக்க விவசாயம், தொழிலைப் பாதுகாக்க, வளப்படுத்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதிமுகவினர் எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் அவர்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது.

வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற தன்னாட்சி பெற்ற எந்த அமைப்புகளையும் மோடி அரசு சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. இதில், தேர்தல் ஆணையமும் அடக்கம்.

வாக்குக்காக பணம் விநியோகிக்கும் ஆளும் கட்சியினரை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தால்கூட தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கண்டுகொள்வதில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீடு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடுகளை சோதனை செய்து பிரச்சினையை திசை திருப்புகிறது.

பாரபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஒரு இடத்தைக்கூட தர மாட்டார்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே