ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார்(16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சதீஸ்குமார் அவரது செல்போனில் பப்ஜி கேம்மினை ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சதீஸ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தைத் திடலில் உட்கார்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, சதீஸ்குமார் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.