ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட்டோர் வரும் 6ம் தேதி பதவியேற்க உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 18570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் பணி நேற்றோடு நிறைவடைந்து, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார்.
25 பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
போட்டியிட்டவர்களின் பெயர்கள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்ததால், இந்த 25 பதவியிடங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
வாக்கு எண்ணும் பணியில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டதாக தெரிவித்த அவர், புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் 6ஆம் தேதி பதவி ஏற்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.
முறைகேடுகள் ஏதுமின்றி அமைதியான முறையில் உள்ளாட்சித் நடைபெற்றதாக குறிப்பிட்ட பழனிசாமி உரிய ஆதாரங்களுடன் புகார்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்