உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி காணொளி வாயிலாக மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த நடவடிக்கைகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிற மாநிலங்களில் ஆணையம் ஏற்கனவே கேட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசித்தார்.
அதில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை இறுதி செய்வது, மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்வது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோல தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களை அமைப்பது, அதற்கு தேவைப்படும் பொருட்களை பெறுவது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.