அயோத்தி வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

அயோத்தி வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினைக்கு முடிவு காண பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் தீவிரம் காட்டியது.

பல்வேறுகட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி முன்னாள் நீதிபதிகள் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த்தர் குழு அமைக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

பல்வேறு புதிய ஆதாரங்கள் வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், விசாரணை இன்றுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 17-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதால் அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே அயோத்தி வழக்கு நிறைவு பெரும் வகையில், இதை தொடர்ந்து மத ரீதியிலான மோதல்களை ஏற்படாமல் தடுக்க மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் மூலம் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரகசிய எச்சரிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அரசு மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அயோத்தியில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே