தமிழ் சினிமாவின் மக்கள் செல்வனாக திகழும் விஜய் சேதுபதியின் படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தனக்கென எந்த பாணியும் வைத்துக்கொள்ளாமல் திரையில் இவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்
இவரின் மார்க்கெட்டை இன்னும் உச்சத்தில் வைத்திருக்கின்றன.
மற்ற நடிகர்களின் படங்கள் ஆண்டுக்கு ஒன்று இரண்டு வெளிவரும் நிலையில் விஜய் சேதுபதிக்கு குறைந்தது நான்கு படங்களாவது திரைக்கு வந்து விடுகிறது.
அந்த அளவிற்கு தன்னை எப்போதும் பிஸியாக வைத்திருக்கும் விஜய் சேதுபதி அவ்வப்போது சமூகத்திற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளுக்கு தனது கருத்தை முன்வைப்பதற்கும் தவறுவதில்லை.
இந்த கருத்துக்கள் வரவேற்போடு விமர்சனங்களையும் சேர்த்தே பெற்று வந்தன.
குறிப்பாக இவர் மேடைகளில் பேசும் சமூகம் சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகின்றன.
படங்கள் மட்டுமல்லாது ஒரு சில தனியார் விளம்பர படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்தார் விஜய் சேதுபதி.
அதில் இவர் நடித்த உணவுப் பொருள் சார்ந்த தனியார் விளம்பரம் ஒன்று சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளானது.
இதனையடுத்து சிறிது காலம் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜய் சேதுபதி தற்போது மீண்டும் ஒரு தனியார் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இந்த விளம்பரம் ஆன்லைன் சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் ஆப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிட்டத்தட்ட சில்லரை வணிகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் சிறு, குறு வியாபாரிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என வணிக அமைப்பு சார்ந்த பலரும் குரல் கொடுத்து வந்தன.
இந்நிலையில் ஆன்லைன் சந்தைக்கு ஆதரவளிக்கும் வகையில் விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இந்த விளம்பரத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில்லறை வணிகர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு துணைபோகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாகவும், இந்த முற்றுகை போராட்டம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் ஆன்லைன் சந்தையில் மூலமாக சில்லரை வணிகம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவை தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் கூறும்போது உலக அளவில் ஆன்லைன் சந்தை பெரிய அளவில் செயல்படுவதால் இவர்கள் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பொருட்களை கொள்முதல் செய்கின்றனர் என்றும், இதில் காய்கறி பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்கள் எதனையும் அவர்கள் குடோன்கள் போன்றவற்றில் தேக்கி வைப்பது இல்லை என்றும் கூறினார்.
மேலும் காய்கறிகள் கெடாமல் இருப்பதற்கு அவற்றில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டு குளிரோட்தப்படும் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன என்றும் அதன் பின்னர் மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது அவற்றை ஆன்லைன் சந்தையில் மலிவு விலையில் களமிறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
காய்கறி பொருட்களை தவிர்த்து பிற பொருள்களை பார்த்தோமென்றால் ஆன்லைன் நிறுவனங்கள் அவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்கின்றனர் என்றும் இதற்கு வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறுகின்றனர் என்றும் கூறினார்.
மேலும், அதற்கான வட்டி விகிதம் என்பது மிகக் குறைவாக இருப்பதாகவும் அந்த வசதி நமது வியாபாரிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
இது மட்டுமல்லாமல் இதற்கு அரசின் ஒத்துழைப்பும் முழுமையாக இருப்பதாகவும் அப்படி இருக்கும் பொழுது நாங்கள் எப்படி அவர்களுடன் போட்டி போட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இதற்கு சினிமா பிரபலங்கள் ஆதரவளிப்பது தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.