தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்..? – நாளை ஆலோசனை..!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருடன், தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு 5 முதல் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று புதிய கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.

இவ்வாறு முதல் அலையை விட, கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனிடையே, பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மால்கள், தியேட்டர்கள், ஷோ ரூம்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, வார விடுமுறைகளில் கடற்கரைகளுக்கு செல்லத் தடை, ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த புதிய உத்தரவுகள் கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா பாதிப்புகள் குறைந்ததாக இல்லை. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை எட்டியிருப்பதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்க நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே