மூன்று மாதங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் பதிவான கொரோனா உயிரிழப்பு..!

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.

அங்கு முதல் பாதிப்பு பரவத்தொடங்கியது முதல் அந்நாட்டு அரசு மேற்கொண்ட துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு வைரஸ் பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து ஜூன் மாதங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய அந்நாட்டு அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவித்தது.

இதனிடையே அங்கு கடந்த மாதம் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த அந்நாட்டு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது.

இருப்பினும் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் அலை வீசத்தொடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டின் அதிபர் தேர்தலும் அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், கடந்த மாதம் ஆக்லாந்தில் தோன்றிய இரண்டாவது அலை தொற்றுநோய்களின் ஒரு பகுதியாக இந்த நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கடைசியாக அங்கு மே 24ம் தேதி கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கு கடந்த மாதம் முதல் இரண்டாம் அலையில் பதிவான வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் மொத்தமாக இதுவரை 1764 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே