தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? – முக்கிய அறிவிப்பு வெளியிட்டது அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசு தனியாக அறிவிப்பு வெளியிட்டாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே பெரும்பாலும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் UNLOCK 4 தொடர்பான வழிகாட்டுதல்கள் மத்திய அரசால் நேற்று வெளியிடப்பட்டது. இது வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிவரை பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க வாய்ப்பில்லை. இதனால் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் வகுப்புகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, சமூக/ கல்வி/ விளையாட்டு/ பொழுதுபோக்கு/ கலாச்சார/ மதம் சார்ந்த/ அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அதிகபட்சமாக 100 பேர் வரை அனுமதிக்கப்படலாம். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

அவர்கள் ஆன்லைன் கல்வி/ டெலி கவுன்சிலிங் மற்றும் அதுசார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். இதுதொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

அங்கு ஆசிரியர்களிடம் உரிய ஆலோசனைப் பெற்று திரும்பலாம். இது மாணவர்களின் பெற்றோர்/ பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலின் பேரிலே நடைபெற வேண்டும். ஆய்வக/ பரிசோதனை செயல்பாடுகளில் ஈடுபடும் ஆராய்ச்சி அல்லது முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களை கல்லூரிகளுக்கு அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் உயர்கல்வித்துறை உரிய முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே