ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விட்டது தொடர்பாக ஆட்சியர் நேரில் விசாரணை..!!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. முனுசாமி மனைவி மங்கை என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி இதுபோன்ற ஏலம் நடைமுறை அங்கே நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 22ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட உள்ளது. இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு ஏலம் விடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில்தான், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் உட்பிரிவு கொண்ட அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதையறிந்து துத்திப்பட்டு மதுர பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள், தேர்தல் புறக்கணிக்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தபடி உள்ளனர். எனவே அங்கு போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வாக்குகளைக் கொண்ட துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து ஒருவரை ஏலம் விட்டு நிறுத்துவதால் குறைவான வாக்குகளைக் கொண்ட பொண்ணங்குப்பம் பஞ்சாயத்தை சார்ந்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு இழக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் ஏலம் எடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

பொண்ணங்குப்பம் பகுதி மக்களுக்கென தனி ஊராட்சி அந்தஸ்து வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து மூன்று முறை இதேபோல் ஏலம் விடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
செஞ்சி வட்டாட்சியர் ராஜன் மற்றும் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்திற்கு ஏலம் போன விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆட்சியர் மோகன் பொண்ணங்குப்பம் ஊராட்சிக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் பிரிவு கொண்ட அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 13 விடப்பட்டதாக துத்திப்பட்டு மதுரை பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் புகார் தெரிவித்ததால் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டேன். ஊராட்சி மன்ற தேர்தலைப் பொருத்தவரை பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தேன். மேலும் ஏலம் விடும் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே