மேகதாது அணை தொடர்பாக தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது தமிழக விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் முதற்கட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியும் என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், கடந்த நான்காம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.
அக்கடிதத்தில், கர்நாடகத்திற்கு சொந்தமான பகுதியில்தான் அணை கட்ட முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்காக தமிழக அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் தமிழகத்திற்கு தந்த 177.25 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாக குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, அதனால் தண்ணீரை சேமிக்க மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.