உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகு முறையை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளதாக கூறியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு வெளிச்சத்திற்கு வந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக கூட்டணி முன்னணியில் இருந்ததை ஆளும் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் துணையோடு திமுகவின் வெற்றியை தடுக்க சதி செய்ததாகவும் சாடியுள்ளார்.

வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதுடன்; திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே